பிரதமர் மோடி நாளை வருகை: மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு
- பாம்பனில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா நாளை நடக்கிறது
- பிரதமர் மோடியை சந்திக்க 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, மதியம் 3.50 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அதன்பின்னர், மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இந்தநிலையில், பிரதமரின் வருகையையொட்டி, அவரது தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம், மதுரை விமான நிலையத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மத்திய பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மதுரையில் விமான நிலையத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பிரதமர் டெல்லி செல்லும் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அன்றைய தினம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்குப் பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படும்.
இதுபோல், மதுரை விமான நிலையத்தில் யார்? யார்? பிரதமரை சந்திக்க உள்ளார்களோ அவர்களை வரிசைப்படுத்தி உரிய அனுமதி சீட்டுடன் அவரை சந்திக்க வைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில், பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை சந்தித்து விட்டு பிரதமர் தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.