பிரதமர் மோடி வருகை எதிரொலி - தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- பிரதமர் தூத்துக்குடி வருகையையொட்டி 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது 2 விமான நிறுவனங்கள் மூலம் சென்னை, பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யும் வகையில் ரூ.380 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையத்தில் இதுவரை 1,350 மீட்டர் அளவில் இருந்த விமான ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணி காரணமாக தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும்.
விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு திறந்து வைக்கிறார். இதற்காக விமான நிலைய முகப்பு பகுதியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் ரூ.4,500 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதோடு புதிய திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் மற்றும் அங்குள்ள மத்திய பாதுகாப்பு படையினரும் உடன் இருந்தனர்.
பிரதமர் தூத்துக்குடி வருகையையொட்டி 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான எஸ்.பி.ஜி. குழுவினர் இன்று தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் வந்து செல்லும் பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.
மேலும் பாதுகாப்பு மற்றும் நவீன தொலைதொடர்பு கருவிகள் அடங்கிய வாகனங்களும் தூத்துக்குடி வருகின்றன.
தொடர்ந்து தமிழக பாதுகாப்பு படையினர், கமான்டோ படையினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்கின்றனர். பிரதமர் வருகையொட்டி இன்று முதல் நிகழ்ச்சி நடைபெறும் 26-ந் தேதி வரை தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. மேலும் மரைன் போலீசார், இந்திய கடலோர காவல் படை, கடற்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.