அரசியலில் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடி தான்- சீமானுக்கு வானதி சீனிவாசன் பதில்
- சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர் கொடுத்துக் கொள்ளக்கூடாது.
- காவி என்பது பா.ஜ.க.வுக்கு சொந்தமான நிறம் கிடையாது.
கோவை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில் நான் அரசியல் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் திரையுலக சூப்பர் ஸ்டார். இரண்டு சூப்பர் ஸ்டார்களை பார்த்ததும் பலர் பயந்து விட்டார்கள் என தெரிவித்தார்.
தன்னை அரசியல் சூப்பர் ஸ்டார் என்று பெருமிதப்படுத்திக் கொண்ட சீமானின் கருத்துக்கு பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு வானதி சீனிவாசன் அளித்த பதில் வருமாறு:-
சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர் கொடுத்துக் கொள்ளக்கூடாது. மற்றவர்கள் தான் கொடுக்க வேண்டும். அரசியலில் சூப்பர் ஸ்டார் என்றால், மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தான். அவருக்கு உலக நாடுகள் எல்லாம் மிகச்சிறந்த தலைவர் என பட்டமளித்துக் கொண்டிருக்கிறது.
காவி என்பது பா.ஜ.க.வுக்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது இந்த நாட்டின் பாரம்பரியம். அதை சீமான் தவறாக புரிந்து கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.