பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா ராம நவமி தினமான இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
- இலங்கை அனுராதபுரம் தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி மண்டபம் ஹெலிபேட் தளத்தை வந்தடைந்தார்.
பாம்பன் பாலத்திற்கு அருகிலேயே புதிய ரெயில் பாலம் கட்டும் பணிக்கு 2019 ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 01.03.2019-ல் பிரதமர் மோடி மூலம் அடிக்கல் நாட்டி, ரூ.545 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கின. இருவழிப் பாதை வசதியுடன் கூடிய ரெயில்வே பாலத்தின் வழியாக கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் பாலத்தின் மையப்பகுதியில் செங்குத்து வடிவிலான தூக்கு பாலமும் நிறுவப்பட்டுள்ளது. தெற்காசியாவில் முதல் செங்குத்து தூக்கு பாலம் இது என்பது குறிப்பி டத்தக்கது. பல்வேறு சவால்களை கடந்து இந்த பாலம் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.
மத்திய பா.ஜ.க. அரசின் கனவுத்திட்டமான பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி நேரில் திறந்துவைப்பதே சிறந்தது என்று கூறப்பட்டது. அதன்படி பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா ராம நவமி தினமான இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு வந்தடைந்தார். இலங்கை அனுராதபுரம் தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி மண்டபம் ஹெலிபேட் தளத்தை வந்தடைந்தார்.
பிரதமர் மோடியை அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அங்கிருந்து, காரில் பிரதமர் மோடி புறப்படுகிறார்.
இதையடுத்து பாலத்தின் மையப்பகுதிக்கு வந்து, அங்கு அமைத்துள்ள மேடையில் இருந்தபடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்துவைத்தார். ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.
புதிய தூக்குப்பாலம் திறக்கப்பட்டு இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், பாலத்தை கடப்பதை பிரதமர் மோடி பார்வையிட்டார்.