தமிழ்நாடு செய்திகள்

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு: 600-க்கு 599 மதிப்பெண் பெற்ற மாணவி

Published On 2025-05-08 11:39 IST   |   Update On 2025-05-08 14:01:00 IST
  • பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • மாணவர்கள் 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

பழனி:

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகள் எழுதினர்.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த மாதம் 4-ந்தேதி தொடங்கியது. 17-ந்தேதி அந்த பணிகள் நிறைவடைந்தன. மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று முடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பிளஸ்-2 தோ்வு முடிவுகள் மே-9ந்தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்னதாக இன்று வெளியிடப்பட்டது.

தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகளில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.03 சதவீதம் ஆகும்.

தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அது போல தேர்வு எழுதிய 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகளில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 600-க்கு 599-மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ், பொருளாதாரம், வணிகவியல், கணக்கு பதிவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில தலா 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும் பெற்று 599 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பழனி பாரத் வித்யா பவன் பள்ளியை சேர்ந்த இந்த மாணவிக்கு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News