தமிழ்நாடு செய்திகள்

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்- 10 பேர் அதிரடி கைது

Published On 2025-02-25 11:05 IST   |   Update On 2025-02-25 14:39:00 IST
  • சென்னை மாநகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
  • நீலாங்கரையில் உள்ள சீமானின் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் இன்று தீவிரமாக கண்காணித்தனர்.

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பெரியார் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகை யிட்டு பெரியார் ஆதரவு இயக்கத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். சீமான் வீட்டு அருகே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சீமான் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ராயப்பேட்டை பகுதியில் வைத்து சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு திட்டமிட்ட 10 பேர் பிடிபட்டனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரியார் பற்றிய சீமானின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்யும் வகையிலேயே அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு திட்டமிட்டதாக போலீசில் சிக்கியவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள சீமானின் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் இன்று தீவிரமாக கண்காணித்தனர். அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் அரங்கேறி விடக்கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக நீலாங்கரையில் சீமான் வீடு இருக்கும் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Tags:    

Similar News