வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்- பதிவு செய்ய இன்று 6 இடங்களில் சிறப்பு முகாம்
- பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.
- காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை மாநகரில் வீடுகளில் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள் அதனை சரியாக பராமரிக்க முடியாத சூழலில் தெருக்க ளில் விட்டுவிடுகிறார்கள்.
இது போன்ற வளர்ப்பு நாய்கள் தெரு நாய்களிடம் இருந்து விலகியே இருக்கும். அந்த நாய்களோடு ஒன்றோடு ஒன்று கலக்காது.
இப்படி கைவிடப்படும் வளர்ப்பு நாய்களை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து கொன்றுவிடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
வளர்ப்பு நாய்களை சாலைகளில் அழைத்துச் செல்லும்போது அவை ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிப்பதும் தொடர்கிறது.
வளர்ப்பு நாய்களுக்கு பலர் உரிய முறையில் தடுப்பூசிகளை போடாத காரணத்தால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கடிவாளம் போடும் வகையில் மாநகராட்சி சார்பில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மைக்ரோ சிப் பொருத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று 6 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் பொதுமக்கள் பலர் பங்கேற்று தங்களது வீடுகளில் உள்ள வளர்ப்பு நாய்களை அழைத்து வந்து மைக்ரோ சிப்களை பொருத்திச் சென்றனர்.
இன்றைய முகாமில் பங்கேற்ற மாநகராட்சி அதிகாரிகள் இணையதளத்தில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்வது குறித்தும் விளக்கம் அளித்தார்கள். மைக்ரோசிப் பொருத்தும்போது கொடுக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் எளிதாக பதிவு செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
வருகிற 24-ந் தேதிக்குள் நாய்களை பதிவு செய்து மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செல்ல பிராணிகள் வளர்ப்போர், இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இணைய தளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுகளையும் நாய்களை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.
செல்ல பிராணிகள் பதிவுக்கு சிறப்பு முகாம்களை நடத்தினால் வசதியாக இருக்கும் என, பலரும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே இன்று முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் செல்ல பிராணிகள் பதிவுக்கான நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதால், அவற்றை வளர்ப்போர், எளிதில் பதிவு செய்து பயன்பெறும் வகையில், 'மைக்ரோசிப்' பொருத்தி ஆவணங்கள் வழங்கவும், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தவும், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வருகிற 16 மற்றும் 23-ந் தேதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள், உரிமையாளர்களால் கைவிடப்பட்டு சென்னையில் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் சென்னை மாநகர சாலைகளில் ஆதரவின்றி சுற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவற்றையெல்லாம் தடுக்கும் வகையில் தான் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.