தமிழ்நாட்டில் பார்சல் சேவை நிறுத்தம்: அமெரிக்காவுக்கு பொருட்கள் அனுப்ப முடியாமல் உறவினர்கள் தவிப்பு
- அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை நடந்தது.
- சனிக்கிழமை வரை பதிவு செய்த பார்சல்கள் 29-ந்தேதிக்கு முன்னதாக சென்று விடும்.
சென்னை:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களை கொடுத்து வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் பொருட்களுக்கு50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இந்திய பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 100 அமெரிக்க டாலர்களுக்கு மேலான இந்திய பொருட்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் அமெரிக்காவில் சுங்க வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் சுமார் ரூ.70 ஆயிரம் (800 டாலர்) வரையிலான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டது. மேலும் 29-ந்தேதி முதல் அனைத்து தபால் பொருட்களுக்கும் அதன் மதிப்புக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சுமார் 9 ஆயிரம் மதிப்புள்ள (100 டாலர்) பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பால் இந்தியா அதிர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க விமானங்களில் இந்திய பார்சல்களை அனுமதிக்க கூடாது என்று சுங்கத்துறை அறிவித்தது. அமெரிக்காவின் சுங்கத்துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லாததால் நாடு முழுவதும் இன்று முதல் பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்திய தபால் துறை இந்த அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தபால் நிலையங்களில் அமெரிக்காவுக்கு பார்சல் புக்கிங் செய்வது நிறுத்தப்பட்டது.
இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பங்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை நடந்தது. ஆனால் அமெரிக்காவில் உள்ள எந்த நகரங்களுக்கும் தமிழகத்தில் பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் உள்ள 2000 தபால் அலுவலகங்களில் வெளிநாடுகளுக்கு பார்சல் பதிவு செய்வது வழக்கம். சென்னையில் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம், கடற்கரை தபால் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலங்களிலும் அமெரிக்காவுக்கு பார்சல் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது.
இது குறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அதிகாரி கூறியதாவது:-
தமிழகத்தில் அஞ்சல் துறைக்கு சொந்தமான 200 தபால் அலுவலகங்கள் உள்ளன. அந்த அலுவலகங்களில் எல்லாம் இன்று முதல் அமெரிக்காவுக்கு மட்டும் பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிடம் இந்திய அரசு தெளிவான தகவல்களைப் பெற்று கூடுதலாக வரி விதிப்பு பற்றிய முழு விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள். மத்திய அரசிடம் இருந்து இது பற்றிய தகவல் வந்த பிறகுதான் பார்சல் சேவை தொடங்கும். அதுவரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவுக்கு மட்டுமே சேவை நிறுத்தப்பட்டு இருப்பதால் சனிக்கிழமை வரை பதிவு செய்த பார்சல்கள் 29-ந்தேதிக்கு முன்னதாக சென்று விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பார்சல் சேவை அமெரிக்காவுக்கு நிறுத்தப்பட்டதால் அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக தமிழகத்தில் இருந்து மளிகை பொருட்கள், துணிமணிகள், தின்பண்டங்களை உறவினர்கள் அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக 20 கிலோ பார்சல் வரை அனுப்புவதற்கு அனுமதி உண்டு.
அமெரிக்காவிற்கு 20 கிலோ பார்சல் அனுப்புவதற்கு ரூ.17,440 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண பார்சல் ஆகவும், ஸ்பீட் போஸ்ட் பார்சல் ஆகவும் ரெண்டு பிரிவாக பதிவு செய்யப்படுகிறது.
இந்திய தபால் துறையிடமிருந்து அடுத்த கட்ட தகவல் வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும். இதனால் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்ப முடியாமல் உறவினர்கள் தவிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.