விபத்தை ஏற்படுத்திய ஆம்னி வேன்.
நடைபயிற்சி சென்ற கணவன், மனைவி உள்பட 3 பேர் ஆம்னி வேன் மோதி உயிரிழப்பு
- ஆம்னி வேனின் முன் பகுதியும் சேதமடைந்து ஆம்னி வேனை ஓட்டி வந்த மணிகண்டனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
- தலை மற்றும் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 3 பேரும் பலியானார்கள்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ராசிபாளையம் காட்டூர் எரியூர்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மலையண்ணன் (70), விவசாயி. இவரது மனைவி நிர்மலா (55). அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் என்பவரது மனைவி செல்லம்மாள் (65). இவர்கள் 3 பேரும் நாமக்கல்-மோகனூர் செல்லும் தார் சாலை ஓரத்தில் காட்டூர் பெட்ரோல் நிலையம் அருகே இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் நடைபயிற்சி சென்றனர்.
அப்போது மோகனூர் பாம்பாட்டி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆம்னி வேனை அதிவேகமாக ஓட்டி வந்தார். பின்னர் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் நடைபயிற்சி சென்ற மலையண்ணன், அவரது மனைவி நிர்மலா மற்றும் செல்லம்மாள் ஆகிய 3 பேர் மீதும் மோதியது. இதில் அவர்களுக்கு தலை மற்றும் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 3 பேரும் பலியானார்கள்.
அதேபோல் ஆம்னி வேனின் முன் பகுதியும் சேதமடைந்து ஆம்னி வேனை ஓட்டி வந்த மணிகண்டனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து உடனடியாக மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் விபத்தில் பலியான 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆம்னி வேன் டிரைவர் மணிகண்டனை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மோகனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் மோகனூர் போலீசார் ஆம்னி வேனை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து ஆம்னி வேனை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடைபயிற்சி சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.