தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்- ஓ.பன்னீர் செல்வம்
- அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும்.
- கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னையில் அழைத்து விஜய் பேசுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவாலயத்தில் குருபூஜையை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருதுபாண்டியர்களின் வீரம், தியாகம் உலக அளவில் போற்றப்பட்டு மதிக்கப்பட்டு வருகின்றது. எனது சார்பில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு வெள்ளிக் கவசத்தை அணிவித்து உள்ளேன்.
எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழ்நிலை நீடித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னையில் அழைத்து விஜய் பேசுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க வை தொடங்கும்போது தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சட்டவிதியினை கொண்டு வந்தார். இதை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது என சட்டவிதியை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிந்தால் போதுமென்று சட்ட திருத்தம் செய்துள்ளார். இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இதனை சென்னை சிவில் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இறுதி தீர்ப்பை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் அசோகன், வழக்கறிஞர் சுந்தரபாண்டியன் உள்ளனர்.