வடகிழக்கு பருவமழை... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு
- அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழையளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- சேலத்தில் 12 சதவீதம் குறைவாக மழை பொழியும்.
கோவை:
கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையையொட்டி உள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து, ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் எனும் கணினி கட்டமைப்பை கொண்டு இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.
அதன்படி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கரூர் மாவட்டங்களில் சராசரிக்கு ஒட்டிய மழையும், பிற அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழையளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் சராசரி மழையளவு 810 மி.மீ. எதிர்பார்க்கப்படும் மழையளவு 890 மி.மீ. கரூர் மாவட்டத்தில் 15 சதவீதம், கிருஷ்ணகிரியில் 14 சதவீதம், சேலம் 12 சதவீதம் குறைவாக மழை பொழியும்.
விழுப்புரம், திருப்பத்தூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் சராசரியை விட 10 சதவீதம் குறைவாக பொழியும்.
இதர மாவட்டங்களில் 4 முதல் 9 சதவீதம் வரை மழை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.