திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழை: வேகமாக உயரும் அமராவதி- திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம்
- தொடர் மழை காரணமாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
- திருப்பூர் மாநகரில் தினமும் சுமார் 750 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை பெரும்பாலான இடங்களில் இடைவிடாது சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. குளு, குளுவென வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருமூர்த்தி மலைக்கு வந்த பக்தர்கள், அமணலிங்கேசுவரர் கோவில் அருகே குளித்து விட்டு, மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர். தொடர் மழையால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 988 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 883 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
90 அடி உயரம் கொண்ட அந்த அணையில், இன்று காலை நிலவரப்படி 73 அடியாக தண்ணீர் உள்ளது. இதனால் தற்போது அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையொட்டி அணைக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் திருமூர்த்தி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 60 அடி உயரம் கொண்ட அந்த அணையில் 46.21 அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையானது காலை 8 மணிக்கு மேலும் நீடித்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் மணீஷ் நாரணவரே உத்தரவிட்டார்.
8 மணிக்கு மேல் விடுமுறை விடப்பட்டதால் அதற்கு முன்னதாக பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டனர். விடுமுறை விடப்பட்டதால் மீண்டும் பள்ளிக்கு சென்று குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதனால் பெற்றோர்கள்-மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
தொடர் மழை காரணமாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
திருப்பூர் மாநகரில் தினமும் சுமார் 750 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், பொதுமக்கள் நள்ளிரவு வரை பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். இதன் காரணமாக அனைத்து வீதிகளிலும் பட்டாசு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.
தொடர்மழை காரணமாக துப்புரவு பணியாளர்களால் முழுமையாக குப்பையை அகற்ற முடியவில்லை. இருந்தபோதிலும் முடிந்த அளவுக்கு மழையில் நனைந்தபடி குப்பை அள்ளும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.