அ.தி.மு.க.வில் என்னை சேர்க்க யாரும் சிபாரிசு செய்ய வேண்டாம்- ஓ.பன்னீர்செல்வம்
- 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி எந்தவொரு தேர்தல் வந்தாலும் நமக்கான வெற்றியை அந்த இயற்கையே உருவாக்கி கொடுக்கும்.
- வாரிசு அரசியல் வேண்டாம் என்பதற்காகவே நான் எனது மகன்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் என்று கூறினேன்.
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் எனது விசுவாசத்திற்கு ஜெயலலிதா பலமுறை சான்று அளித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் அனைத்தும் ஒன்றாக இணைய வேண்டும்.
6 மாதம் நான் அமைதியாக இருந்தால் அ.தி.மு.க.வில் என்னை சேர்த்துக் கொள்வதற்காக சிபாரிசு செய்கிறேன் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியிருக்கிறார்.
என்னை அழைத்துச்சென்று அ.தி.மு.க.வில் சேர்த்துவிடுமாறு நாங்கள் யாரையும் கேட்கவில்லை. எனக்காக யாரும் சிபாரிசு செய்ய வேண்டாம்.
ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி எந்தவொரு தேர்தல் வந்தாலும் நமக்கான வெற்றியை அந்த இயற்கையே உருவாக்கி கொடுக்கும்.
இதற்காக எந்தவிதமான சிபாரிசோ, பரிந்துரையோ செய்ய தேவையில்லை. என்னை அ.தி.மு.க.வில் சேர்த்துவிடுமாறு யாரிடமும் சொல்லவும் இல்லை. சொல்லவும் மாட்டோம்.
ஆர்.பி.உதயகுமார் பற்றி நான் கருத்து சொல்ல தேவையில்லை. அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளராக வெங்கடேசன் இருந்தபோது என்னுடைய மகன்கள் 2 பேரில் ஒருவரை மாவட்ட செயலாளராக நியமனம் செய்ய இருப்பதாக கூறினார்.
அப்போது ஆர்.பி.உதயகுமார் எந்த நிலையில் இருந்தார் என்பதை நான் கண்கூடாக பார்த்தேன். அதை சொல்வது அரசியல் நாகரீகமாக இருக்காது. வாரிசு அரசியல் வேண்டாம் என்பதற்காகவே நான் எனது மகன்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் என்று கூறினேன்.
இதுபற்றி ஜெயலலிதாவும் உங்கள் மகன்களில் ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி அளிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.
எனவே இனிமேலும் ஆர்.பி.உதயகுமார் என்னைப்பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கையை அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பின்பற்றி வந்தனர். எனவே இருமொழிக்கொள்கையே தமிழர்களின் உயிர் மூச்சாக இருந்து வருகிறது.
செங்கோட்டையன் தனது மனத்தாங்கலை வெளிப்படுத்தியுள்ளார். விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாததால் அவர் மனம் வெதும்பி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.