தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

Published On 2025-10-31 13:59 IST   |   Update On 2025-10-31 13:59:00 IST
  • தெற்கு மியான்மர், அந்தமான் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும்.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர புயலாக உருவாகியுள்ளது.

அந்த வகையில் அந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது. முதலில் இந்த புயல் சென்னையை நோக்கி வருவதாக கணிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு அருகே வந்து அங்கிருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடைய கரையை கடந்தது. இதையடுத்து தமிழகத்தில் பெய்து வந்த மழை நின்று தற்போது வெயில் அடிக்கத்தொடங்கி உள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு மியான்மர், அந்தமான் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News