இயற்கை விவசாயத்தில் சிறந்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவருக்கு நம்மாழ்வார் விருது- ஆளுநர் ஆர்.என்.ரவி
- இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் சிறந்த முதுகலை ஆராய்ச்சி விருதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
- பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்படும்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது:-
இந்தியாவில் நடைபெற்ற பசுமை புரட்சி, விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து விவசாயிகள் ரசாயனம் கலந்த உரங்களை தவிர்த்து, இயற்கை முறைக்கு மாற தொடங்கினர். இதனால், உணவு உற்பத்தி அதிகரித்து நாடு முழுவதும் இயற்கை வளம் செழித்தது.
இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுகள் நமக்கு மட்டுமின்றி, மற்ற நாடுகளின் பசியையும் போக்குகின்றன. எனவே நாம் விவசாயிகளை மறந்து விடக்கூடாது.
நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன்தான். உயர்கல்வி படிக்கும்போது விவசாயம் செய்து உள்ளேன். எனவே பொதுமக்கள் அனைவரும் இயற்கை முறைக்கு மாற வேண்டும்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் சிறந்த முதுகலை ஆராய்ச்சி விருதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
சிறந்த வேளாண் விஞ்ஞானியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான மறைந்த டாக்டர் ஜி.நம்மாழ்வாரின் நீடித்த பாரம்பரியத்தையும், இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் அவரது முன்னோடி பணிகளையும் முன்னெடுத்து செல்வத ற்காக இந்த விருது நிறுவப்பட்டுள்ளது.
இந்த விருது இயற்கை வேளாண்மையை முன்னேற்ற ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியாவின் நிலையான விவசாய முன்னேற்றத்தையும், உலகளாவிய இயற்கை வேளாண்மைத்துறையில் அதன் வளர்ந்து வரும் இருப்பையும் ஆதரிக்கிறது.
இந்த விருது ஆண்டுதோறும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் இயற்கை வேளாண்மையில் சிறந்த குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியை மேற்கொண்ட மாணவருக்கு வழங்கப்படும். பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்படும்.
இந்த விருது ரூ.50 ஆயிரம், தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.