தமிழ்நாடு செய்திகள்

தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா தி.மு.க. அரசு?- நயினார் நாகேந்திரன்

Published On 2025-09-10 10:06 IST   |   Update On 2025-09-10 10:06:00 IST
  • தாமிரபரணி ஆற்றில், கழிவுநீரைக் கலக்கவிட்டு, அதன் தன்மையையும் மக்களின் அடிப்படைத் தேவையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது.
  • தி.மு.க. ஆட்சியில் தெற்கு தேய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழ் கண்டதோர் வையை, பொருநை நதி" என மகாகவி பாரதியார் பாட்டெடுத்த தாமிரபரணி ஆறு, @arivalayam அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலுமாக சீரழிந்து போயுள்ளது. நெல்லையின் வற்றாத ஜீவநதியாகவும், சுற்றியுள்ள 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையின் உயிர்நாடியாகவும் பெருக்கெடுத்த தாமிரபரணி ஆற்றில், கழிவுநீரைக் கலக்கவிட்டு, அதன் தன்மையையும் மக்களின் அடிப்படைத் தேவையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது ஆளும் அரசு.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருவது, அவற்றின் கரைகளைப் பலப்படுத்துவது, கால்வாய்களை மறுசீரமைப்பது, நீர்நிலைகளில் கலக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மையின் அடிப்படை வேலைகளைக் கூட செய்ய முடியாத தி.மு.க. அரசு, எதற்காக நீர்வளத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியது? அனைத்து உயிர்களின் வாழ்வாதாரமான நீராதாரத்தைத் தி.மு.க. அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

தென் தமிழக மக்களின் அடிப்படைத் தேவை இப்படி அந்தரத்தில் ஊசலாடுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தக் கவலையுமில்லையா? ஒருவேளை, தண்ணீருக்காக தென் மாவட்ட மக்களைத் திக்குமுக்காட வைப்பதும் திராவிட மாடல் கொள்கைகளில் ஒன்றாக இருக்குமோ? தி.மு.க. ஆட்சியில் தெற்கு தேய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News