தமிழ்நாடு செய்திகள்

ED சோதனைக்கு பயந்து தான் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்- முத்தரசன்

Published On 2025-04-15 10:08 IST   |   Update On 2025-04-15 10:08:00 IST
  • ஒரு கட்சி மீது குற்றம் சாட்டும் அரசியல்வாதி அவர் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும்.
  • தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் மன்னிப்பது தான் தமிழனின் பண்பு.

நாகப்பட்டினம்:

நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 30-வது தேசிய மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநாடு பணிகள் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே பா.ஜ.க.வுடன் எக்காலத்திலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, கூட்டணி வைக்கப்போவதும் இல்லை என எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கூறி வந்தனர்.

ஆனால் திடீரென பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து இதுதான் விடியல் கூட்டணி என்றும், இந்த கூட்டணியால் தான் மக்களுக்கு எதையும் செய்ய முடியும். அதனால் என்ன விளைவுகள் வந்தாலும் அதை எதிர்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இந்த கூட்டணி அ.தி.மு.க தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை.

நிர்பந்தம், அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து தான் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். சரத்பவார் கட்சி, சிவசேனா கட்சியின் நிலை என்ன ஆனது. பா.ஜ.க தன்னுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியை நயவஞ்சகமாக அழித்துவிடும். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் மத்திய அரசை தமிழக மக்களே எதிர்க்கின்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஊழல் குறித்து அண்ணாமலை பேசினார். இன்று கூட்டணி வைத்துள்ள காரணத்தால் அ.தி.மு.க.வினர் ஊழல் செய்யவில்லை என பேசுவார்களா?.

ஒரு கட்சி மீது குற்றம் சாட்டும் அரசியல்வாதி அவர் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அ.தி.மு.க போன்ற கரை படிந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, ஊழல் பற்றி பேச உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகுதியில்லை. மேலும் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் மன்னிப்பது தான் தமிழனின் பண்பு.

ஆட்சி, அதிகாரத்தை பிடிக்கவே அனைவரும் அரசியல் கட்சி நடத்துகின்றனர். கம்யூனிஸ்டு கட்சியும் ஒரு நாள் தமிழகத்தையும், இந்தியாவையும் ஆளும். அப்போது கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் முதலமைச்சராகவும், பிரதமராகவும் ஆவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News