தமிழ்நாடு செய்திகள்

135 அடியை கடந்த முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2025-08-21 10:29 IST   |   Update On 2025-08-21 10:29:00 IST
  • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 69 அடியிலேயே நீடித்து வருகிறது.
  • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

கூடலூர்:

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது. ரூல்கர்வ் நடைமுறைப்படி 136 அடிக்கு மேல் ஜூலை மாதத்தில் தேக்கமுடியாது என்பதால் கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் சரிந்தது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழைபெய்ய தொடங்கி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.30 அடியாக உள்ளது. அணைக்கு 1311 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5942 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 69 அடியிலேயே நீடித்து வருகிறது. முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க அதிகாரிகள் முடிவு செய்து அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. அணைக்கு 638 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5690 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News