தமிழ்நாடு செய்திகள்

49 வயதில் மகளுடன் சேர்ந்து மருத்துவம் படிக்க இருக்கும் தாய்

Published On 2025-07-31 07:43 IST   |   Update On 2025-07-31 07:43:00 IST
  • விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.
  • ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.

மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தாயும், மகளும் வந்திருந்தனர். முதலில் மகளுக்காக தாய் உடன் வந்திருக்கிறார் என நினைத்திருந்த நிலை அப்படியே மாறி, கலந்தாய்வில் மகள் உதவியுடன் தாய் மருத்துவப்படிப்பை தேர்வு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அமுதவல்லி (வயது 49) என்ற பெண்தான், மருத்துவம் படிக்க இருக்கிறார். 'நீட்' தேர்வுக்காக மகள் படிக்க தயாராகி கொண்டிருந்தபோது அந்த புத்தகத்தை தானும் படித்து நீட் தேர்வை மகளுடன் சேர்ந்து எழுதியுள்ளார்.

நீட் தேர்வில் தாய் அமுதவல்லி 147 மதிப்பெண் எடுத்திருந்தாலும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.

இதுகுறித்து அமுதவல்லியிடம் கேட்டபோது, 'நான் 'பிசியோதெரபிஸ்ட்டாக' இருக்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மருத்துவம் படிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் அப்போது எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது என்னுடைய மகள் மூலம் அந்த கனவு நிறைவேறி உள்ளது. ஆனால் ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.

மருத்துவம் படிக்க இருக்கும் அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாளினியும் நீட் தேர்வில் 460 மதிப்பெண் எடுத்து, பொது கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார்.

அவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், தாயும், மகளும் ஒரே ஆண்டில் மருத்துவப்படிப்பில் நுழைவார்கள்.

Tags:    

Similar News