பண மோசடி புகாரில் வழக்குப்பதிவு: அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி பிரசாத் கட்சியில் இருந்து நீக்கம்
- அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பிரசாத் மீது புகார்.
- நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் தொடர்பாக பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகி பிரசாத் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் தொடர்பாக பிரசாத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பிரசாத் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்தனர். இந்த நிலையில் பிரசாத்தை அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் T. பிரசாத், (கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர், தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.