தமிழ்நாடு செய்திகள்

நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என்று பயந்து ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் - மு.க.ஸ்டாலின்

Published On 2025-06-03 11:03 IST   |   Update On 2025-06-03 11:03:00 IST
  • மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
  • ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மைக்காக போராடியவர் கருணாநிதி

மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா இன்று சிறப்பாக நடத்தப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார். அங்குள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். வீட்டில் இருந்த தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அறிவாலயத்தில் திரண்டிருந்தவர்களுக்கு முதலமைச்சர் இனிப்புகளை வழங்கினார்.

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சமூகநீதி, சாமானியர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான கருணாநிதியின் அரும்பணிகள் போற்றப்படும்.

* கொள்கை, சரித்திர சாதனை, கலாச்சார நினைவுகளோடு நம்மோடு வாழ்பவர் கருணாநிதி.

* ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மைக்காக போராடியவர் கருணாநிதி என்று கூறினார்.

அப்போது முதலமைச்சரிடம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தது எதிர்பார்த்ததுதான். ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News