இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
- நார்வே செஸ் தொடரில் குகேஷ் 3-வது இடம் பிடித்துள்ளார்.
- அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
நார்வே செஸ் தொடரில் அந்நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இறுதிச்சுற்று போட்டியில் கார்ல்சனை விட அதிக புள்ளிகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து விளையாடிய குகேஷ், செய்த பெரிய தவறால் அவர் 3-வது இடத்திற்குச் சென்றார்.
10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்தார். கருவானா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடமும், குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர்.
இந்நிலையில், நார்வே செஸ் தொடரில் 3-வது இடம் பிடித்த குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 2025-ம் ஆண்டு நார்வே செஸ் போட்டியில் 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த நமது வீரர் டி.குகேஷ் குறித்து பெருமை கொள்கிறோம். குறிப்பிடத்தக்க திறமை மற்றும் உறுதியுடன், இந்தியாவின் செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக குகேஷ் தொடர்ந்து பிரகாசித்து வருகிறார் என பதிவிட்டுள்ளார்.