தமிழ்நாடு செய்திகள்

'உடன் பிறப்பே வா' ஆலோசனை கூட்டம்- ஆரணி தொகுதி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Published On 2025-08-23 12:21 IST   |   Update On 2025-08-23 12:21:00 IST
  • இதுவரை 45 தொகுதிகளில் தி.மு.க.வின் கள நிலவரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்து உள்ளார்.
  • தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

சென்னை:

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்காக வைத்துள்ளார். இதற்காக அவர் தி.மு.க.வின் ஒவ்வொரு பிரிவிலும் சுறுசுறுப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அதோடு தொகுதி வாரியாக ஆய்வு செய்யும் பணியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். "உடன்பிறப்பே வா" என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடந்து வருகிறது.

இதுவரை 45 தொகுதிகளில் தி.மு.க.வின் கள நிலவரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்து உள்ளார். இதற்காக ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் முக்கிய தி.மு.க. நிர்வாகிகளை வரவழைத்து அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.

தொகுதி கள நிலவரம், மக்கள் மனநிலை, தி.மு.க.வுக்கு இருக்கும் செல்வாக்கு, தொகுதியில் உள்ள குறைகள் போன்றவற்றை இந்த சந்திப்பின்போது மு.க. ஸ்டாலின் கேட்டு அறிகிறார். அதற்கு ஏற்ப அவர் தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) ஆரணி தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் ஆரணி தொகுதி நிர்வாகிகளை வரவழைத்து அவர் சந்தித்து பேசினார். அப்போது ஆரணி தொகுதி கள நிலவரங்களை கேட்டு அறிந்தார்.

ஆரணியில் தேர்தல் பணிகளை உற்சாகமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News