தமிழ்நாடு செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2025-11-20 13:15 IST   |   Update On 2025-11-20 13:15:00 IST
  • சேத்துப்பட்டில் மேம்படுத்தப்பட்ட சிறிய கால்பந்து மைதானம் என 20.89 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.
  • டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ஆவடி, அன்னனூர், கோணாம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள், புழல் மேட்டுபாளையத்தில் மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம் மற்றும் சேத்துப்பட்டில் மேம்படுத்தப்பட்ட சிறிய கால்பந்து மைதானம் என 20.89 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 2024-ம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னை, மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் தெ. ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் இரா. காமராசு (ஆய்வுத் தமிழ்), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த க. சோமசுந்தரம் என்கிற கலாப்ரியா (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 59 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்து, தமிழ்நாட்டில் உள்ள 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் திறன்மிகு மையங்களாக மேம்படுத்திடும் வகையில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், 190 உதவிப் பேராசிரியர்கள், 12 உதவி நூலகர்கள் மற்றும் 11 உதவி இயக்குநர் (உடற்கல்வி) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Tags:    

Similar News