தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேக இறுதிகட்ட பணிகளை பார்வையிட்டார் அமைச்சர் சேகர்பாபு

Published On 2025-07-03 14:37 IST   |   Update On 2025-07-03 14:37:00 IST
  • கும்பாபிஷேக விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
  • பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பில் நடைபெற்ற பெருந்திட்ட வளாகப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகளில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 1-ந்தேதி மாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கும்பாபிஷேக விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்றும் வரும் இறுதிகட்ட பணிகளை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் இளம்பகவத், கோவில் தக்கார் அருள்முருகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

முன்னதாக கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் இன்று 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டார். 

Tags:    

Similar News