தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 1 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Published On 2025-11-15 14:57 IST   |   Update On 2025-11-15 14:57:00 IST
  • உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் சீனா உள்ளது.
  • தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

சென்னை:

உலக நீரிழிவு தினத்தையொட்டி சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு பதாகை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் சீனா உள்ளது. 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆண்டிற்கு 34 லட்சம் பேர் நீரிழிவு நோயினால் உயிரிழக்கிறார்கள். ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் ஒருவர் மரணத்தை தழுவுகிறார்.

இந்தியாவில் 20 முதல் 79 வயது வரை உள்ள முதியவர்கள் 9 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசின் பாதம் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 9 லட்சம் பேர் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நீரிழிவு, வாதம் நோயினால் 72 லட்சத்து 70 ஆயிரத்து 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் ஏற்பட்டு 33 ஆயிரத்து 185 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 26,448 பேர் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். 3169 பேருக்கு உறுப்புகள் நீக்கப்பட்டு உள்ளன.

எனவே தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதியும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நீரிழிவு நோயை அலட்சியமாக கருதாமல் கவனமாக கையாள வேண்டும். இதனால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. எனவே மீண்டும் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நல வாழ்வு குழு இயக்குனர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தர, மருத்துவ கல்வி இயக்குனர் ராஜ குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News