12 தொகுதிகளில் மதிமுக போட்டியிட வேண்டிய நெருக்கடி: துரை வைகோ
- மதிமுக-வை பொறுத்தவரையில் 7 ஆண்டுகள் முடிவடைந்து 8ஆவது ஆண்டாக திமுக கூட்டணியில் இருக்கிறது.
- கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
மதிமுக முதன்மை செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான துரை வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதிமுக-வை பொறுத்தவரையில் 7 ஆண்டுகள் முடிவடைந்து 8ஆவது ஆண்டாக திமுக கூட்டணியில் இருக்கிறது. மதவாதத்திற்கு எதிரான கொள்கை கொண்ட கூட்டணியில் சேர்ந்துள்ளோம். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்.
கட்சியின் அங்கீகாரத்திற்காக வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் 12 இடங்களில் போட்டியிட வேண்டிய நெருக்கடி உள்ளது. இது கட்சியில் உள்ள அனைத்து நிர்வாகிகளின் ஆசை. ஆனால், தலைமைதான் இது தொடர்பாக முடிவு செய்யும். பொதுக்குழுவில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
அந்த கூட்டணியில் அழைப்பு விடுக்கிறார்கள். இந்த கூட்டணியில் அழைப்பு விடுக்கிறார்கள் என்ற அரசியல் வியாபாரத்தில் மதிமுக ஈடுபடாது. கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியே போய்விடுவோம் என்பது கிடையாது.
பொதுநல நோக்கம் மற்றும் மக்களின் நலன் கருதி திமுக கூட்டணியில் சேர்ந்தோம். இடங்களை விட சுயமரியாதையை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.