விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் தொடங்கியது
- இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வந்த பொது மக்களை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று அழைத்துச் சென்றார்.
- காலை 9 மணிக்கு நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். இதையொட்டி தனது பிரசார பயணத்தையும் அவர் தொடங்கினார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த விஜயின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதனால் கடும் வேதனைக்குள்ளான விஜய் தனது பிரசார பயணத்தை தள்ளி வைத்திருந்தார்.
ஒரு மாதம் கழித்து உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார்.
இதன் பின்னர் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தும் கூட்டணி பற்றி முடிவெடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கியும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இருப்பினும் விஜய் மக்களை நேரில் சென்று சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறாமலேயே இருந்து வந்தன. பொது இடத்தில் விஜய் மக்களை சந்தித்து பேசினால் அதிகம் பேர் திரண்டு வருகிறார்கள். இதற்கு உரிய அனுமதி பெறுவதிலும் சிக்கல்கள் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு விஜய் உள் அரங்கில் மக்களை சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டனர். இதன்படி காஞ்சிபுரம் மாவட்ட மக்களுடன் விஜய் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதற்காக சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்குள்ள கூட்ட அரங்கில் உள் அரங்கு நிகழ்ச்சியாக விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இன்று விஜய்யை சந்தித்து பேசுவதற்காக 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
இவர்கள் அனைவரும் இன்று காலை 7 மணியில் இருந்தே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர். விஜய்யை சந்திக்க வருபவர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி தங்களது செல்போன் மூலமாக கியூஆர் கோடை ஸ்கேன் செய்து அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே விஜய்யை சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வந்த பொது மக்களை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று அழைத்துச் சென்றார். இதற்காக இன்று காலையிலேயே கூட்டம் நடைபெறும் கல்லூரிக்கு அவர் வருகை தந்து முன்னேற்பாடுகளை மேற்கொண்டார்.
கரூரில் செப்டம்பர் 27-ந்தேதி நடைபெற்ற கூட்ட நெரிசலுக்கு பிறகு விஜய் பொதுமக்களை சந்திக்காமலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் 55 நாட்களுக்கு பிறகு விஜய் மீண்டும் இன்று மக்களை சந்தித்தார். இதற்காக காலை 9 மணிக்கு நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து இதுபோன்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் விஜய் பங்கேற்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலமாக தேர்தல் வியூகங்களையும் வகுத்து உள்ளார். இதனால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்கி உள்ளனர்.