ராஜ்யசபா சீட் விவகாரம்: எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு
- தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது.
- இந்த தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்பதில் அ.தி.மு.க. மவுனம் காத்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கியது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. சார்பாக மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்கள் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர்களை அறிவிப்பதில் அ.தி.மு.க. தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. அதேநேரம் தங்களுக்கு ஒரு இடம் வேண்டும் என கேட்டு தே.மு.தி.க, பா.ம.க. நெருக்கடி கொடுத்து வருகின்றன.
வேட்பாளர்கள் தேர்வு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அந்த கட்சியினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்துப் பேசினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. மாநிலங்களவை எம்.பி சீட் வழங்குவது தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.