பொறுமை கடலினும் பெரிது, காத்திருப்போம்: மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதில்..!
- பொறுமை கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்.
பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் ஒரு மேல் சபை எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தி.மு.க. கூட்டணிக்கு சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் 4 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். அதுபோல அ.தி.மு.க. கூட்டணி 2 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.
மக்களவை தேர்தலின்போது அதிமுக கூட்டணில் தேமுதிக அங்கம் வகித்தது. அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவதாக உறுதி அளித்ததாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். ஆனால் அப்படி உறுதி அளிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டயில் தேமுதிக இடம் பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்பினால், மாநிலங்களவை எம்.பி. பதவியை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் எடப்பாடி பழனிசாமி எந்த வகையான நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவி குறித்து பிரேமலதா விஜயகாந்த கூறுகையில் "பொறுமை கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்" என்றார்.