பழம்பெரும் அரசியல்வாதி - யார் இந்த செங்கோட்டையன்?
- முதல்முறையாக 1977-ல் சத்தியமங்கலத்தில் இருந்தும், அதன்பிறகு 8 முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் செங்கோட்டையன்.
- தொண்டர்களின் தலைவனாக இருந்தாலும், கட்சி பதவிகளில் எப்போதும் செங்கோட்டையன் ஆர்வம் காட்டியதில்லை.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். இவர் அ.தி.மு.க. சார்பாக 9 முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்முறையாக 1977-ல் சத்தியமங்கலத்தில் இருந்தும், அதன்பிறகு 8 முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அ.தி.மு.க. ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்திருந்தபோது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வெற்றி பெற்றார். செங்கோட்டையன் வனத்துறை அமைச்சராகவும், போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், விவசாயத்துறை அமைச்சராகவும், தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும், வருவாய்த்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.
ஜெயலலிதா, சத்துணவு திட்ட உயர்மட்ட குழுவில் இருந்தபோது, அவரை காங்கேயம் அழைத்து வந்து விழா நடத்தியவர் செங்கோட்டையன். அப்போது தொடங்கிய விசுவாசம், அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தது.
அ.தி.மு.க. தலைமை ஜெயலலிதாவிடம் இருந்தவரை, எந்த தேர்தல் என்றாலும், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை செங்கோட்டையன் மேற்கொண்டு வந்தார்.
முதல் நாள் தேர்தல் பிரசாரம் முடிந்து ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் வரை காத்திருந்து விட்டு, அடுத்த நாள், ஒரு தொகுதியில் எந்தெந்த இடங்களில் பேசலாம் என்பதில் தொடங்கி மேடை, மைக், கூட்டம் சேர்ப்பது உள்பட அனைத்தையும் நள்ளிரவுவரை சுற்றிப் பார்த்து, ஓர் ஒத்திகை நடத்தி திருப்தியான பின்பே உறங்கச் செல்வார் செங்கோட்டையன். இதனால் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை செங்கோட்டையனிடமே ஜெயலலிதா ஒப்படைத்து வந்தார்.
தொண்டர்களின் தலைவனாக இருந்தாலும், கட்சி பதவிகளில் எப்போதும் செங்கோட்டையன் ஆர்வம் காட்டியதில்லை. அதேபோல், தனக்கென ஆதரவாளர் வட்டத்தையும் சேர்க்க அவர் விரும்பியதில்லை.
கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின் சில தனிப்பட்ட காரணங்களால் செங்கோட்டையனின் அமைச்சர் பதவி, ஜெயலலிதாவால் பறிக்கப்பட்ட பின்பும், அதே விசுவாசத்தோடு இருந்தவர் செங்கோட்டையன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சித் தலைமையை கைப்பற்ற ராஜதந்திரங்களை பலரும் பிரயோகிக்க, கட்சி நலன் பெரிது என்று அமைதியாய் இருந்தவர் செங்கோட்டையன்.