தமிழகத்தில் நாளை முதல் 38 ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்லும்- மத்திய மந்திரி எல்.முருகன் தகவல்
- காங்கிரஸ்-தி.முக. கூட்டணி 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது வெறும் ரூ.878 கோடி மட்டும் தமிழகத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்தின் திட்டங்களுக்காக ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் மத்திய அரசு தமிழகத்துக்கு தீட்டி வரும் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
மத்திய மந்திரி எல்.முருகன் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகம் முழுவதும் பல்வேறு ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்வதில்லை என்கிற கோரிக்கையை நான் சுற்றுப்பயணம் செய்யும் போது மக்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அவர்களின் கோரிக்கையை நான் மத்திய அரசிடம் எடுத்து சென்றேன்.
அதன்படி நாளை (18-ந்தேதி) முதல் 38 ரெயில்கள், 38 ரெயில் நிலையங்களில் நின்று செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பிறப்பித்துள்ளார்.
ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, இருங்கூர், சிங்காநல்லூர், வள்ளியூர், மேலப்பாளையம், ஆரல்வாய்மொழி, நாங்குனேரி, கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி உள்ளிட்ட 38 ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்லும்.
பிரதமர் மோடியை பொறுத்தவரையில் தமிழக நலனுக்காக கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார். இந்த நிதியாண்டில் மட்டும் ரெயில்வே துறைக்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மத்தியில் காங்கிரஸ்-தி.முக. கூட்டணி 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது வெறும் ரூ.878 கோடி மட்டும் தமிழகத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 77 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. எழும்பூர் ரெயில் நிலையம் மட்டும் ரூ.800 கோடி செலவில் விமான நிலையங்களுக்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக ரெயில்வே துறையில் 2,587 கிலோ மீட்டர் நீளமுள்ள ரெயில்வே பாதைகள் அமைக்கும் பணிகள் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரெயில்களும் தமிழக பயணிகளின் நலனுக்காக விடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.
38 ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்வதன் மூலமாக 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன் அடைவார்கள்.
சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டு மேம்பாட்டு பணிகளும் நடைபெற்றுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்தின் திட்டங்களுக்காக ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரெயில் நிலையங்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. கூறி இருப்பது தவறான தகவல் ஆகும். ரெயில்வே துறையில் மட்டுமின்றி உற்பத்தி துறையின் கீழ் உள்ள பாதுகாப்பு துறைகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். இதன் மூலம் பிரதமர் மோடி தமிழக மக்கள் மீதும், தமிழ் மீதும் கொண்டு உள்ள அக்கறையை புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.