தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் : SIT அலுவலகத்தில் எரிந்த நிலையில் கிடந்த ஆவணங்கள் - பென் டிரைவில் இருந்தது என்ன?

Published On 2025-10-18 10:45 IST   |   Update On 2025-10-18 10:45:00 IST
  • 1300 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.
  • பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரபடுத்த உள்ளனர்.

கரூர்:

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக விஜய் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜிதேந்திர குமார், மகேஸ்வரி என்பி அஞ்சாரியா அடங்கிய அமர்வு ஒரு நபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்து இந்த தீர்ப்பை வழங்கியது.

இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.பி.பிரவீன் குமார் தலைமையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய 6 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் நேற்று முன்தினம் கரூர் வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கினர்.

இவர்களிடம் நேற்று சிறப்பு புலனாய்வு குழு ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையிலான சிறப்பு குழுவினர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் ஆவணங்கள் மற்றும் விசாரணை நிலை அறிக்கையை ஒப்படைத்தனர். வழக்கு குறித்த 640 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்பட மொத்தம் 1300 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் ஒரு நபர் ஆணைய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விரைவில் விசாரணை ஆவணங்களை ஒப்படைக்க உள்ளார்.

ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மரத்தின் மீது ஏறியதில் மரக்கிளை முறிந்து விழுந்தது. இது தொடர்பாக வனத்துறையின் ஆவணங்களை பெற்று வனத்துறையினரிடம் சி.பி.ஐ. குழுவினர் விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தை இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வயிடுகிறார்கள். அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் நடந்த விவரம் குறித்து கேட்டு விசாரிக்கின்றனர்.

பின்னர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், படுகாயம் அடைந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்கிறார்கள்.

மேலும் சிறப்பு புலனாய்வு குழு ஒப்படைத்த டிரோன் பட காட்சிகள் மற்றும் சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி நெரிசலுக்கு காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரபடுத்த உள்ளனர்.

இதற்கிடையே சிறப்பு புலனாய்வுக்குழு தங்கி இருந்த இடமான திட்ட அலுவலகத்தில் தங்களது தளவாட பொருட்கள், பிரிண்டர், கணினி உள்ளிட்டவற்றை தங்கள் வாகனத்தில் எடுத்து சென்றனர்.

அப்போது அந்த அலுவலகத்தின் பின்புறம் சில இடங்களில் காகிதங்கள் கிழித்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. அதன் அருகில் ஒரு பென் டிரைவ்வும் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

அவை பயன்படுத்தப்பட்டு மீதம் ஆனவையா அல்லது முக்கிய ஆவணங்களா என்பது மர்மமாக உள்ளது. பென் டிரைவ் குப்பைக்கு வந்தது எப்படி என்பதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

அந்த பென் டிரைவை போலீசார் எடுத்து சென்றனர். ஏற்கனவே கரூர் சம்பவம் தொடர்பான புலன் விசாரணை பட்டியலில் தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்ட விவகாரத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் இணைத்துள்ளனர். தீவைத்து எரிக்கப்பட்டது நகல் ஆவணங்களா அல்லது அசல் ஆவணங்களா என சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கரூர் விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News