தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: போட்டோ, வீடியோ எடுத்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

Published On 2025-10-31 11:00 IST   |   Update On 2025-10-31 11:00:00 IST
  • தமிழக வெற்றிக்கழகத்தினர் கூறிய சதி குற்றச்சாட்டுக்கு விடை தேட உள்ளனர்.
  • சி.பி.ஐ. விசாரணை குழுவில் மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து 6 சி.பி.ஐ. அதிகாரிகள் வந்து இணைந்துள்ளனர்.

கரூர்:

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. குஜராத் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான குழுவினர் கரூர் பயணியர் மாளிகையில் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கரூர் திரும்பினர். அதைத்தொடர்ந்து மீண்டும் சி.பி.ஐ. விசாரணை சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் சில தினங்களுக்கு முன்பு கரூர் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடந்தபோது, அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்கள் மூலமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அவர்களை கரூர் பயணியர் மாளிகைக்கு வரவழைத்து இன்று விசாரணை மேற்கொள்கின்றனர்.

இதில் நெரிசலுக்கான காரணம் குறித்து துப்பு துலக்குகிறார்கள். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தினர் கூறிய சதி குற்றச்சாட்டுக்கும் விடை தேட உள்ளனர்.

முன்னதாக வழக்கு பதிவு செய்த கரூர் நகர ஆய்வாளர் மணிவண்ணனிடம் நேற்று முதல்கட்ட விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், வழக்கின் முகாந்திரம் என்ன? என்ன மாதிரியான விசாரணை மற்றும் தகவல் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது?

முதல் கட்டமாக யாராரிடம் விசாரணை நடத்தப்பட்டது? அதில் பெறப்பட்ட தகவல் என்ன? கூட்டத்திற்குள் சென்ற முதல் ஆம்புலன்ஸ் வாகனம் எது? எந்த தகவல் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சென்றார்? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தவெக நிர்வாகிகள், சி.பி.ஐ.யில் வழக்கு தொடர்ந்த பிரபாகரன் ஆகியோரிடம் என அடுத்தடுத்து பலர் விசாரணைக்கு ஆஜர் ஆவார்கள் என தெரிய வருகிறது.

இந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணை குழுவில் மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து 6 சி.பி.ஐ. அதிகாரிகள் வந்து இணைந்துள்ளனர். இதன் காரணமாக சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து விசாரணை மேலும் தீவிரமாகவும் என தெரிய வருகிறது.

Tags:    

Similar News