தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவம் பற்றி அவதூறு பரப்பியதாக பிரபல யூடியூபர் அதிரடி கைது- மேலும் 22 பேர் மீதும் நடவடிக்கை பாய்கிறது

Published On 2025-09-30 10:34 IST   |   Update On 2025-09-30 10:34:00 IST
  • சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.

சென்னை:

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதுபோன்ற வீடியோக்கள் மட்டுமின்றி முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்று கருத்துகளை பதிவிடும் நபர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறையினரை குற்றம் சாட்டியும், குறிப்பிட்ட கட்சி மீது களங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இப்படி அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை தலைமை இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தியான பதிவுகளை வெளியிட்ட 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியான சகாயம், மாங்காடு பகுதியைச் சேர்ந்த விஜய் கட்சி உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான சரத்குமார் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெலிக்சை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர மேலும் 22 பேர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர். இதை மீறி, செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசில் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கென்று ஏற்கனவே தனிப்பிரிவு உள்ளது. அவர்கள் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.

Tags:    

Similar News