கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜர்
- கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர்:
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது அங்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனர். இதில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கூட்ட நெரிசல் சம்பந்தமாக தொடர்பாக ஏற்கனவே விசாரணைக்காக சி.பி.ஐ. தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டவர்களில் உயிரிழந்தவர்களின் 9 குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜர் ஆனார்கள்.
அவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி விசாரணை நடத்தி வரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதனயடுத்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.