புஸ்சி ஆனந்த் பெங்களூரில் பதுங்கல்?- தனிப்படை போலீசார் விரைவு
- புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
- காவல்துறை தங்களை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யும் என்பதால் 2 பேரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
கரூரில் கடந்த 27 ம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக கரூர் டவுன் போலீசார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் மதியழகன் மற்றும் மத்திய நகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர். புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
காவல்துறை தங்களை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யும் என்பதால் 2 பேரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே புஸ்சி ஆனந்த் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கரூர் தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.
மேலும் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்ய கோவை , சேலம் திருப்பூர் ஆகிய பகுதிகளில் சல்லடை போட்டு தேடி வருகிறார்கள்.