தமிழ்நாடு செய்திகள்

கரூர் நெரிசல் வழக்கு: போலி மனுத்தாக்கல் என முறையீடு - உறுதி அளித்த உச்ச நீதிமன்றம்

Published On 2025-10-13 12:39 IST   |   Update On 2025-10-13 12:39:00 IST
  • மனுத் தாக்கல் செய்யவே இல்லை என உயிரிந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.
  • செல்வராஜ் மற்றும் ஷர்மிளா காணொலி மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்று தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள் மனுத் தாக்கல் செய்யவே இல்லை என உயிரிந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.

கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ள செல்வராஜ் மற்றும் ஷர்மிளா, தாங்கள் எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை என காணொலி மூலம் ஆஜராகி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தைப் பிரிந்துச் சென்ற, தங்களுக்கு தொடர்பில்லாத பன்னீர்செல்வம் பணத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாக உயிரிழந்த சிறுவனின் தாயார் சர்மிளா குற்றம் சாட்டினார். மேலும், தன்னை ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டதாக செல்வராஜ் என்பவரும் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து போலி மனுதாக்கல் செய்த விவகாரத்தை விரிவாக ஆய்வு செய்த பின்னர் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

Similar News