தமிழ்நாடு செய்திகள்
null

'கடனை வைத்து மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது பிழையானது' - ப.சிதம்பரம்

Published On 2026-01-01 14:09 IST   |   Update On 2026-01-01 14:11:00 IST
  • நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது
  • ஒரு மாநிலத்தின் மொத்தக் கடனை வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது.

'நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது, ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை' என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்திக்கு பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

"எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஒரு மாநிலத்தின் மொத்தக் கடனை வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது. அமெரிக்காவில் தொடங்கி இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், கனடா வரை எல்லா வளர்ந்த நாடுகளின் மொத்தக் கடன் ஆண்டு தோறும் கூடுகிறது

இந்தியாவின் மொத்தக் கடனும் எல்லா மாநிலங்களின் மொத்தக் கடன்களும் ஆண்டுதோறும் கூடுகின்றன. இது இயல்பு. மொத்தக் கடன் என்பது சரியான அளவை அல்ல. மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை விழுக்காடு (சதவீதம்) என்பதே பொருத்தமான அளவை. தமிழ்நாட்டில் இந்த அளவை 2021-22 முதல் 2025-26 வரை ஸ்திரமாக (ஒரே நிலையில்) இருந்து வருகிறது.

நிதிப் பற்றாக்குறை (fiscal deficit) ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு 2025-26 ஆம் ஆண்டில் நிதி ஆயோக் (Niti Aayog) விதித்த வரம்பான 3% என்ற நிலையைத் தமிழ்நாடு எட்டும் என்று இந்த ஆண்டின் மதிப்பீடு சுட்டிக் காட்டுகிறது. இது பாராட்டக்கூடியது.

நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது, ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை." எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, உத்தரப்பிரதேசத்தின் நிலுவைக்கடன் தொகையை விட தமிழ்நாட்டின் நிலுவைக்கடன் மதிப்பு அதிகம் என தெரிவித்திருந்தார். 

Tags:    

Similar News