தமிழ்நாடு செய்திகள்

வீடியோ: காலை பிடித்துவிட்ட அரசுப்பள்ளி மாணவிகள் - தலைமை ஆசிரியை அதிரடி மாற்றம்

Published On 2025-09-03 08:27 IST   |   Update On 2025-09-03 09:20:00 IST
  • சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.
  • மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக கலைவாணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த பள்ளியில் 40 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தனக்கு கால் அமுக்கி விடுமாறு கூறி வந்ததாக தெரிகிறது. சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் அவருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பான சில வினாடிகள் ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இது சம்பந்தமாக தலைமை ஆசிரியையிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை கலைவாணியை அந்த பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News