அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- பொதுமக்கள் சாலை மறியல்
- போலீசார் பஸ் கண்ணாடியை உடைத்தாக ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர்.
- பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் இருந்து இன்று காைல அரசு பஸ் ஒன்று விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் பயணம் செய்தனர். இதனால் பஸ்சில் கூட்டம் அலை மோதியது.
இந்த நிலையில் அந்த பஸ் காலை 7.30 மணியளவில் விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டி அருகே வந்த போது அங்குள்ள பஸ் நிறுத்ததில் நிற்காமல் சென்றது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் பஸ்சின் மீது கல்லை கொண்டு ஏறிந்தனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் பஸ் கண்ணாடியை உடைத்தாக ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைதொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.