கோவில் நிலத்தில் குடியிருக்கும் 300 பேரின் மின் இணைப்பை குடியிருப்போர் பெயரில் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்
- 2001 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் அளவில் வாடகையை உயர்த்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
- கோவில் நிலத்திற்கு வாடகை செலுத்துவோரின் கோரிக்கையை தற்போதைய தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவிலுக்குச் சொந்தமான மனைகள் மற்றும் கட்டிடங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகை விகிதம் அதிகமாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டு குடியிருப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படும் நியாய வாடகை உயர்வான 33.3 சதவீதத்தினை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கலாம் என்றும், இந்த வாடகை விகிதத்தை 2001-ம் ஆண்டு நில மதிப்பு நிலவரத்தின் அடிப்படையில் கணக்கிட்டு, 2001 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் அளவில் வாடகையை உயர்த்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இது வாடகை செலுத்துவோருக்கு மிகவும் பொருளாதார சிரமத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 2007 மற்றும் 2010 ல் தமிழகத்தில் ஆட்சி செய்த அரசு அறிவித்த அரசாணைகள் படி, கோவில் நிலம் சம்பந்தமாக அறிவுறுத்திய வாடகையை தற்போது அமல்படுத்த வேண்டும் என்ற கோவில் நிலத்திற்கு வாடகை செலுத்துவோரின் கோரிக்கையை தற்போதைய தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
மேலும் தமிழக அரசு சென்னை மவுண்ட் ரோடு பச்சை அம்மன் கோவில் நிலத்தில் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் 300 குடும்பத்தினரின் பெயரில் இருந்த மின் இணைப்பை முன் அறிவிப்பின்றி கோவில் பெயருக்கு மாற்றியதை ரத்து செய்து குடியிருப்போரின் பெயரிலேயே மின் இணைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.