மணல் திருடி வந்த லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
- லாரியை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.
- பின்னர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றார்.
கரூர்:
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கரூரில் இருந்து சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மண்மங்கலம் அருகே சென்றபோது அந்த வழியாக மணல் அள்ளி வந்த லாரியை பார்த்தார்.
உடனே அந்த லாரியை பின்னால் காரில் துரத்தினார். சுமார் 18 கிலோமீட்டர் தூரம் பின் தொடர்ந்து சென்று நாமக்கல் மாவட்டம் எல்லையான வேலூர் போலீஸ் சோதனைச் சாவடியில் மடக்கி பிடித்தார்.
பின்னர் அந்த லாரியை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் என்பதால் அவர்கள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மணல் லாரியுடன் வேலாயுதம்பாளையம் சென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகி சரவணனை புகார் கொடுக்குமாறு அறிவுறுத்திய எம்.ஆர்.விஜயபாஸ்கர் பின்னர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றார்.
போலீசார் விசாரணையில் மணல் லாரி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பிடிபட்டதால் அந்த லாரியை போலீசார் பரமத்தி போலீசாரை வரவழைத்து லாரியை ஒப்படைத்தனர்.