குற்றால அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: 5-வது நாளாக குளிக்க தடை
- தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது.
- விவசாயிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளமாக தண்ணீர் விழுகிறது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. சாலைகளில் எதிரில் வந்த வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு வெளிச்சம் குறைவாக இருந்தது. பெரும்பாலான வாகனங்கள் பகல் வேளையிலேயே முகப்பு விளக்கை எரிய விட்டவாறு இயக்கப்பட்டன. தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் விழுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். தற்போது இந்த தடை 5-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது. குற்றாலம் மெயின் அருவியில் விழுந்த வெள்ளம் குற்றாலம் குற்றா லநாத சுவாமி கோவில் வளாகம் மற்றும் சன்னதி பஜார் பகுதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட போலீசார் தடை விதித்தனர்.
தென்காசி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மேலும் தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடைய நல்லூர், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய பாசன குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளது. எனவே விவசாயிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.