தமிழ்நாடு செய்திகள்

மீஞ்சூர் வல்லூர் சாலையில் லாரிகளை நிறுத்தினால் அபராதம்

Published On 2025-05-10 12:34 IST   |   Update On 2025-05-10 12:34:00 IST
  • தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வல்லூர் கூட்டு சாலையை பயன்படுத்தி வருகின்றன.
  • போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகள் நிறுத்தக்கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த வல்லூர் கூட்டு சாலையில் இருந்து வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், கடல்நீரை குடிநீராக்கும் திட்ட நிலையம், ஐ.ஓ.சி.எல். நிறுவனம், நிலக்கரி முனையகம் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு செல்வதற்காக தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வல்லூர் கூட்டு சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதனால் இந்த சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்தும், பல போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து விபத்தினை தடுக்க செங்குன்றம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலன் தலைமையில் போக்குவரத்து போலீசார் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன், தற்காலிக தடுப்பு சுவர்களை மீஞ்சூர் வல்லூர் சாலையில் பயன்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் சாலையின் ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகள் நிறுத்தக்கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். மேலும் கூட்டு சாலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும், இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதாகவும் உயர் கோபுர மின்விளக்கை சரி செய்ய வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News