தாளவாடி அருகே விளை நிலத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்
- காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
- யானை ஒன்று விவசாய தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று இரவு தாளவாடி அருகே மல்லன்குழி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று விவசாய தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.
காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் ஒன்று திரண்டு சத்தம் போட்டு, பட்டாசுகள் வெடித்து ஒரு மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தினமும் இரவு நேரத்தில் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதால் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.