கரூர் கூட்ட நெரிசல்: விஜயை சந்திக்க மாமல்லபுரம் புறப்பட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்
- இந்த முடிவு, பாதுகாப்பு காரணங்களால் எடுக்கப்பட்டதாக த.வெ.க தரப்பு தெரிவித்துள்ளது.
- இந்த சந்திப்பு, த.வெ.க கட்சியின் அரசியல் பயணத்தில் முக்கியமானது என்கின்றனர் த.வெ.க.வினர்.
கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டம் நடந்தது. இதில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் அறிவித்த ரூ.20 லட்சம் நிவாரண உதவி அவர்களின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கரூர் சென்று நேரில் சந்திக்க விஜய் முடிவு திட்டமிட்ட நிலையில் அங்கு மண்டபம் கிடைக்காததால் திட்டத்தை மாற்றியுள்ளார். அதற்கு பதிலாக, மாமல்லபுரத்தில் நாளை (திங்கட்கிழமை) சந்திப்பு நடத்த அறிவித்துள்ளார். இதற்காக கரூரில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு, பாதுகாப்பு காரணங்களால் எடுக்கப்பட்டதாக த.வெ.க தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில், விஜய், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு உதவி அளிக்கும் திட்டங்களை அறிவிக்க உள்ளார். மாமல்லபுரத்தில் குடும்பங்கள் தங்குவதற்காக 50 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. த.வெ.க நிர்வாகிகள், பயண ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். இதற்காக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் ஏற்கனவே கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரில் 31 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 10 பேர் திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 39 பேரின் குடும்பத்தார் சென்னை வர சம்மதித்தனர். அதன்படி அனைவரையும் கரூருக்கு அழைத்து வந்து அங்கிருந்து பிரத்யேக பஸ்கள், வாகனங்கள் மூலம் சென்னைக்கு அழைத்து செல்கிறார்கள்.
இதற்காக 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரவழைக்கப்படுகின்றன. இதனிடையே பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்ல கரூர் பகுதியில் இருந்து யாரும் வாகனங்கள் அனுப்ப மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து திருச்சி, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்படுகின்றன. இன்று மதியம் இந்த வாகனங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சென்னைக்கு புறப்பட்டனர்.
மேலும், இந்த சந்திப்பு, த.வெ.க கட்சியின் அரசியல் பயணத்தில் முக்கியமானது என்கின்றனர் த.வெ.க.வினர். பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் த.வெ.க. ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த சந்திப்பின் போது விஜய், பாதிக்கப்பட்டவர்களுடன் விரிவாக கலந்துரையாடுகிறார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ள விஜய், அவர்களுடன் மனம் விட்டு பேச உள்ளார். இவர்களோடு, நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்திக்க உள்ளனர். அப்போது காயம் அடைந்தவர்களுக்கு அறிவித்த தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை விஜய் நேரடியாக வழங்குகிறார்.