வேலூரில் அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை லட்சிய மாநாடு- எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்
- வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வரவேற்று பேசுகிறார்.
- மாநாட்டையொட்டி வேலூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
வேலூர்:
அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை வேலூர் மண்டலம் சார்பில் லட்சிய மாநாடு வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து ரெயில் மூலம் காட்பாடிக்கு வருகிறார்.
அங்கு அவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்பு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை லட்சிய மாநாட்டிற்கு வருகை தருகிறார்.
மாநாட்டிற்கு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமை தாங்குகிறார். பாசறை நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வரவேற்று பேசுகிறார். கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
மாநாட்டையொட்டி வேலூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கட்சி கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்ட மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு, மாநாட்டு வளாகத்திற்குள் தலைவர்களின் மின்விளக்கு கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.