அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் திருப்பூர் தொழில்துறையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்- எடப்பாடி பழனிசாமி
- திருப்பூரில் தொழிலாளர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
- நிதிச்சுமையை தீர்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.
திருப்பூர்:
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பூரில் இன்று பனியன் உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், விவசாயிகள் , பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் மனுக்கள் அளித்தனர்.
அதனைப்பெற்றுக்கொண்ட அவர் தொழில்துறையினர் மத்தியில் பேசியதாவது:-
டாலர்சிட்டியான திருப்பூர் தற்போது பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திருப்பூரின் நிலைமை எனக்கு கவலைஅளிக்கிறது. தமிழக அரசின் மின்கட்டணம், மாநகராட்சி வரி உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறேன்.
யாருக்கும் இழப்பு இல்லாமல் ஆட்சி நடத்தினோம். 27 சங்கங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர் என்னிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கி உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் திருப்பூர் தொழில்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூரில் தொழிலாளர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். எல்லாவற்றிற்கும் நிதி தேவை. இப்போதைய தி.மு.க. அரசு இதுவரை ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இன்னும் 1 லட்சம் கோடி வாங்குவார்கள். இதன் மூலம் ரூ.5 லட்சம் கோடியாக உயரும். அதற்கு வட்டி கட்ட வேண்டும். நிதிச்சுமையை தீர்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். தொழிலும் வளர வேண்டும். விவசாயமும் செழிக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் தொழில் தானாக வந்து விடும். வெளிமாநில முதலமைச்சர்கள் திருப்பூர் வந்து சலுகைகள் வழங்குவதாக கூறி தொழில் துறையினரை அவர்களது மாநிலத்திற்கு அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமை ஏற்படாதவாறு பார்த்து கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.