மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை- சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தம்
- 4-வது கட்ட பிரசாரத்தை மதுரையில் இருந்து தொடங்குகிறார்.
- கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகளுடன் 85 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.
இதற்காக கோவையில் கடந்த மாதம் சுற்றுப் பயணத்தை தொடங்கிய அவர் இதுவரை 3 கட்டங்களாக பிரசாரம் செய்து உள்ளார். 118 சட்டமன்ற தொகுதிகளில் 60 லட்சம் பேரை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாளில் (1-ந்தேதி) இருந்து 4-வது கட்ட பிரசாரத்தை மதுரையில் இருந்து தொடங்குகிறார். இந்த பிரசாரம் 13-ந்தேதி கோவையில் முடிவடைகிறது.
இப்படி தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வரும் அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்பது போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள். இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகளுடன் 85 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
பூத் கமிட்டியை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி இன்றைய கூட்டத்திலும் அது தொடர்பான கருத்துக்களை கேட்டார். இதில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முழுமையாக முடித்திருப்பது தெரியவந்தது.
இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைவரும் முழுவீச்சில் தயாராக வேண்டும் என்றும், நிச்சயம் நமது உழைப்பு அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.